செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், Google நிறுவனத்தின் Gemini AI புதிய முக்கியமான சாதனையை எட்டியுள்ளது. Gemini செயலியை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 100 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் Google-ன் வரலாற்றில் வேகமாக வளர்ந்து வரும் தயாரிப்பாக Gemini உருவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Gemini-ன் வளர்ச்சி கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் சுமார் 75 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டிருந்த Gemini, பின்னர் 95 கோடியை எட்டியது. தற்போது மேலும் 5 கோடி பயனர்கள் இணைந்ததன் மூலம் 100 கோடி என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை கடந்துள்ளது.
Gemini-யை பயனர்கள் வெறும் கேள்விகளுக்கு பதில் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. குரல் மூலம் Gemini-யுடன் நேரடியாக பேசும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. Google வெளியிட்டுள்ள தகவலின்படி, Gemini பயனர்களில் 63 சதவீதம் பேர் குரல் மூலம் AI-யுடன் தொடர்பு கொள்கின்றனர். மேலும் Gemini Live பயன்படுத்தப்படும் சில உரையாடல்களில் கேமரா மற்றும் Screen Sharing வசதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
படங்களை உருவாக்குவதிலும் Gemini அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. Google-ன் தகவலின்படி, Gemini மூலம் தினமும் 15 கோடிக்கும் அதிகமான படங்கள் உருவாக்கப்படுகின்றன. மாணவர்களும் Gemini-யை கல்வி தொடர்பான கேள்விகள் மற்றும் தாங்கள் Upload செய்யும் கோப்புகளை புரிந்துகொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த 100 கோடி பயனர்கள் என்ற சாதனை, Google நிறுவனத்தின் 14-வது billion-user product என்ற மற்றொரு முக்கிய சாதனையையும் Gemini-க்கு பெற்றுத்தந்துள்ளது. Search, Gmail, Android, Maps, Chrome மற்றும் YouTube போன்ற Google தயாரிப்புகள் ஏற்கனவே இந்த அளவிலான பயனர் எண்ணிக்கையை எட்டியுள்ளன.
AI துறையில் Google Gemini மற்றும் OpenAI-ன் ChatGPT இடையேயான போட்டியும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இரு AI சேவைகளும் மிகப்பெரிய பயனர் எண்ணிக்கையை எட்டியுள்ள நிலையில், அடுத்த கட்டத்தில் புதிய AI அம்சங்கள், வேகமான செயல்பாடு மற்றும் அன்றாட பயன்பாடுகளில் அதிகமான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கிய போட்டியாக மாறக்கூடும்.
Gemini-ன் இந்த வேகமான வளர்ச்சி, AI தொழில்நுட்பம் தற்போது தொழில்நுட்ப ஆர்வலர்களைத் தாண்டி பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை காட்டுகிறது.

