தாய்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான கால்பந்து வீரர் சோஃப்வான் அவாய் (Sofwan Awae) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 12 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையிலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென மின்னல் மைதானத்தை தாக்கியது. இதில் வீரர் சோஃப்வான் அவாய் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்னல் தாக்கிய தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, மோசமான வானிலை நிலவும் நேரங்களில் வெளிப்புற விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

