யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று 24ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது சென். பற்றிக்ஸ் கல்லூரி.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 46.4 ஓவர்களில் 153 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது.யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக ரீ. டேமியன் (36), எஸ். கபிஷன் (32), அணித் தலைவர் எஸ். மதுசன் (25) ஆகிய மூவரும் 25க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை,பந்து வீச்சில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வேகப் பந்து வீச்சாளர் விஜயகுமார் இவொன் 24 ஓட்டங்ளுக்கு நான்கு விக்கெட்களையும் கே. லிக்ஷான் 25 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் 43.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.சென். பற்றிக்ஸ் சார்பாக ஆரம்ப வீரர் எஸ். ஷியான்சன் 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் பற்குணம் மதுஷன் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்கனையும் பெற்றனர்.
இப் போட்டிக்கு இளந்தளிர் உதவும் கரங்கள் அமைப்பு பிரதான அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

