ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்ததுடன், ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளத்தால் பல கிராமங்கள் வெளி உலகத்துடன் தொடர்பை இழந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

