பொதுவாக, நமக்கு சலிப்பாக இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால்,அதைவிட முக்கியமாக குளிர்காலத்தில் கொட்டாவி விடுவது குறைவு.ஆனால், கோடை காலத்தில் கொட்டாவி விடுவது அதிகம். ஏனென்றால், கோடை காலத்தில் மூளை சூடாகிறது.
அதனால், நாம் கொட்டாவி விடும்போது உள்ளிழுக்கிற ஆக்சிஜன், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளையைக் குளிர்விக்கிறது. ஆக, மூளை குளிர்ச்சி அடைவதற்காக கொட்டாவி ஏற்படுகிறது.
நாம் கொட்டாவி விடும்போது அருகில் இருக்கும் மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியில், ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து யார் கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். எல்லோரும் கொட்டாவி விடுவதில்லை.ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே அடுத்தவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து கொட்டாவி விடுகிறார்கள். ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நமக்கு கொட்டாவி வருவதற்கு முக்கிய காரணம் Mirror Neurons.
இந்த நரம்பு அணுக்கள் நம் மூளையில் உள்ளன. இவை மற்றொரு நபரின் செயல்பாட்டை பார்க்கும்போது அதே செயலை செய்யும் திறன் கொண்டவை.ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது மூளையில் உள்ள Mirror Neurons செயல்பட்டு நமக்கும் கொட்டாவி விடத் தூண்டுகிறது.
கொட்டாவி விடுவதை எப்படி நிறுத்துவது ?
நீங்கள் அதிக சோர்வுடனோ அல்லது தூக்கத்தை இழந்தாலோ கொட்டாவி அதிகம் வரும். ஆகவே, மூக்கு வழியாக சுவாசப் பயிற்சி எடுப்பது இங்கு முக்கியமானதாகும்.நிபுணர்களின் கூற்றுப்படி, சோம்பேறித்தனமான-தளர்வான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள். எனவே, சுறுசுறுப்பாக ஏதாவது செய்ய உங்கள் மூளையைத் தூண்டுவது முக்கியம்.கொட்டாவி வரும்போது, உங்கள் மனதை திசைதிருப்ப 5-10 நிமிடங்களுக்கு நடைப் பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.
உங்கள் மூளை அதிக வெப்பமடையும் போது கொட்டாவி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, நீங்கள் சோர்வாக உணரும்போது ஒரு ஐஸ் கட்டியை எடுத்து உங்கள் தலையில் ஒரு நிமிடம் அழுத்தவும். இது உங்கள் தலையை குளிர்ச்சியடையச் செய்து, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
மேலும், குளிர்வான உணவுகளை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் கொட்டாவி விடத் தொடங்கியவுடன் சில குளிர்ந்த தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.குளிரூட்டப்பட்ட திராட்சை, பெர்ரி அல்லது வேறு ஏதேனும் குளிர்சாதன உணவுகள் உங்கள் உடலின் வெப்பத்தை தணிக்கும்.
நாள் முழுவதும் சோர்வாக உணராமல் இருக்க, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஏழு-ஒன்பது மணிநேரம் சீரான மற்றும் தடையற்ற தூக்கத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

