டீ மற்றும் காபி உடல்நலம், ஆற்றல், கலாச்சாரம் சார்ந்த பலன்கள் கொண்டவை. இருப்பினும், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சிறந்த பானம் இவை இரண்டில் எது? என்பது பலருக்கும் இருக்கும் முக்கிய கேள்வியாகவே இருக்கிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரின் காலை வழக்கங்களிலும், சமூக மரபுகளிலும் டீ மற்றும் காபி நீண்ட காலமாக முக்கிய அங்கம் வகிக்கின்றன.
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், உடலை உற்சாகமாக வைத்திருக்கவும் டீ மற்றும் காபி வழங்கும் தனித்துவமான சக்தி, அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பெரிய அளவில் போற்றப்படுகின்றன.
இருப்பினும், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சிறந்த பானம் இவை இரண்டில் எது? என்பது பலருக்கும் இருக்கும் முக்கிய கேள்வியாகவே இருக்கிறது.

1. காஃபின் உள்ளடக்கம் மற்றும் ஆற்றல்: ஒரு கப் காபி சுமார் 80-100 மி.கி. காஃபினைக் கொண்டிருக்கும், இது உடனடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த தூண்டுதலாக உள்ளது. ஆனால், இது திடீர் நடுக்கம், அமைதியின்மை, பதற்றம் அல்லது ஆற்றல் சரிவையும் ஏற்படுத்தக்கூடும்.
டீ (சுமார் 30-50 மி.கி. காஃபினைக் கொண்டிருக்கும்) மென்மையான, நீண்டகால விழிப்புணர்வை வழங்குகிறது. அதில் உள்ள எல்-தியானைன் மன அமைதியையும், கவனத்தையும் ஊக்குவிக்கிறது.
காபி, திடீரென கவனம் தேவைப்படும் நேரங்களில் ஏற்றது, அதே நேரத்தில் டீ, நிலையான ஆற்றலை விரும்புவோருக்கு சிறந்தது.
2. ஆரோக்கிய நன்மைகள்: டீ: ஆரோக்கியத்தின் துணை – கிரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்ற டீ வகைகள் ஆக்ஸிஜனேற்றிகளில் (Antioxidants) நிறைந்தவை.
இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தைச் சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
காபி: மூளைக்கும், கல்லீரலுக்கும் பாதுகாவலன்: காபி பாலிபினால்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலங்கள் நிறைந்தது.
இவை மூளைச் செயல்பாட்டை காக்கவும், அல்சைமர், பார்கின்சன், டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனும் காபிக்கு உண்டு.
மொத்தத்தில், டீ இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு பாதுகாப்பை வழங்க, காபி வளர்சிதை மாற்றம் மற்றும் மூளை ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளை வழங்குகிறது.
3. சாத்தியமான அபாயங்கள்: அதிகப்படியான காபி நுகர்வு பதட்டம், தூக்கக் கோளாறுகள் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
அதே நேரத்தில் டீ, காபியை விட மிதமானதாக இருந்தாலும், பிளாக் டீ-யை அதிகமாக குடிப்பது தூக்கத்தை பாதிக்கலாம், மேலும் உடலின் இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.
இவை இரண்டுமே டையூரிடிக் தன்மையைக் கொண்டிருப்பதால், அதிக அளவில் எடுத்தால் நீரிழப்பு அபாயம் ஏற்படலாம். எனவே, மிதமான அளவே சிறந்தது.
வாழ்க்கை முறை

4. வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்: காபி: மேற்கத்திய கஃபே கலாச்சாரத்தில், காபி உற்பத்தித்திறன், வேகமான தொடக்கம், சமூகச் சந்திப்புகள் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
டீ: ஆசிய நாடுகளில், டீ விருந்தோம்பல், சமநிலை, அமைதியான வாழ்க்கை முறையின் குறியீடாக விளங்குகிறது.
பலருக்கு, காலை ஒரு கப் காபி நாளைத் தொடங்குவதற்கு ஆற்றலை அளிக்க, மாலை ஒரு கப் டீ மனஅமைதியையும், ஓய்வையும் தருகிறது. அதனாலேயே, காலையில் காபி, மாலையில் டீ என பலர் இரண்டையும் வாழ்க்கையில் ஒருங்கிணைத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறாக, டீயும், காபியும் தங்களுக்கென தனித்துவமான பலன்களைக் கொண்டிருக்கின்றன. காபி வேகமான ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்ற உதவிகளை வழங்குகிறது மற்றும் டீ அமைதியான விழிப்புணர்வையும், நீண்டகால ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
எனவே, இவை இரண்டில் எது சரியானது என்பதை தீர்மானிப்பது ஒருவரின் உடல்நிலை, வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது.
மிதமான அளவில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், இவை இரண்டுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நாளை உற்சாகப்படுத்தவும் சிறந்த துணையாக இருக்கின்றன.

