கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் 7 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிமான்ஷி குரானா கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஹிமான்ஷியின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சம்பவத்திற்குப் பிறகு அவர் தலைமறைவாகியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரது புகைப்படத்தை வெளியிட்டு, அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அப்துல் கபூரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவை விட்டு வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றிருந்ததாகவும், அங்கிருந்து கைது செய்யப்பட்டு மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரை கனடாவுக்கு அழைத்து வருவதற்காக டொராண்டோ காவல்துறையின் தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு அதிகாரிகள், தேசிய மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

