ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டுமே தோன்றி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு வர முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அசாத்திய சாதனையைப் படைத்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு அளவு 7’.
இரா. பார்த்திபன்தான் இந்தச் சாதனையின் நாயகன். 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், உலகத் திரைத்துறையையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு கொலைக் குற்றத்திற்காகக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு சாதாரண நபர், எப்படித் தனது புத்திசாலித்தனத்தால் அனைவரையும் வியக்க வைக்கிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், படம் தொடங்குவது முதல் முடியும் வரை திரையில் பார்த்திபன் ஒருவரைத் தவிர, வேறு எந்த மனித முகத்தையும் நாம் பார்க்க முடியாது. பிற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே நமக்குக் கேட்கும்.
மற்ற கதாபாத்திரங்கள் திரையில் தோன்றாவிட்டாலும் அவர்களின் குரல்கள் மூலம் ஒரு முழுமையான கதையை நம் கண்முன் நிறுத்தியிருப்பார் இயக்குனர். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பை கவனித்திருந்தார்.
‘ஒத்த செருப்பு அளவு 7’ திரைப்படம் வெறும் பாராட்டுகளோடு நின்றுவிடவில்லை. அது பல விருதுகளையும் சாதனைகளையும் அள்ளிக் குவித்தது.
1. ஆசிய புக் ஒஃப் ரெக்கார்ட்ஸ் (Asia Book of Records): ஒரே நபர் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த படம் என்ற பெருமையுடன் இதில் இடம் பெற்றது.
2. இந்தியா புக் ஒஃப் ரெக்கார்ட்ஸ்: தேசிய அளவில் இச்சாதனை அங்கீகரிக்கப்பட்டது.
3. தேசிய விருதுகள்: 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறப்பு நடுவர் விருது’ மற்றும் ‘சிறந்த ஒலிப்பதிவு’ ஆகிய இரு விருதுகளை வென்றது.

