தகவல்கள்

டோடோ பறவை ஏன் அழிந்தது?

மனிதர்களால் ஏற்பட்ட மிகத் துயரமான அழிவுகளில் ஒன்று டோடோ பறவையின் (Raphus cucullatus) கதை. இந்தப் பறவை மொரீஷியஸ் தீவில் மட்டுமே வாழ்ந்தது. மனிதர்கள் அங்கு வந்த சில தசாப்தங்களிலேயே இது முற்றிலும் அழிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த இந்தப் பறவை ஏன் இவ்வளவு எளிதாக அழிந்தது?

முதலில் டோடோ பறவை எப்படி மொரீசியசு தீவிற்குள் வந்தன என்று பார்ப்போம்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மொரீஷியஸ் தீவு எரிமலை வெடிப்பால் உருவானது. இது இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு தனித்தீவு. அங்கு முதலில் பெரிய வேட்டையாடும் விலங்குகள் எதுவும் இல்லை.டோடோவின் மூதாதையர் “புறா” குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இன்று வாழும் நிக்கோபார் புறா (Nicobar pigeon) தான் டோடோ பறவையின் நெருங்கிய உறவினர். சுமார் நான்கு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, புறா போன்ற பறவைகள் பறந்து வந்து மொரீசியசு தீவை அடைந்தன. அங்கு போதுமான உணவு (பழங்கள், விதைகள்) அவைகளுக்கு கிடைத்தன. கரடி, புலி,நரி மாதிரி பெரிய வேட்டையாடும் விலங்குகளும் அங்கு இல்லை.இதனால், அந்த பறவைகள் தீவிலேயே தங்கிவிட்டன. காலப்போக்கில் அவைகள் பரிணமித்து, உடல் அளவு பெரிதாகி (எடை 10-20 கிலோ) இறக்கைகள் சிறிதாகி, பறக்கும் திறன் இழந்து பறக்க முடியாத பறவைகளாக மாறின.அலகு பெரிதாகி, பழங்களை உண்ண உதவியது.தங்களின் முன்னோர்கள் போல் அல்லாமல் தரையில் கூடு கட்டி வாழ்ந்தன.இவ்வாறு டோடோ ஒரு தனித்துவமான பறவையாக மாறியது. அது தீவின் இயற்கையை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

1598ஆம் ஆண்டு டச்சுக் கப்பல் மாலுமிகள் மொரீஷியஸுக்கு வந்தனர். அவர்கள்தான் முதலில் டோடோவைப் பார்த்த முதல் மனிதர்கள்.டோடோவுக்கு வேட்டையாடிகளை பற்றி மற்றும் ஆபத்துகளை பற்றி தெரியாததால், அது மனிதர்களை நெருங்கி வந்தது. பயமில்லாததால் எளிதாகப் பிடித்து மனிதர்கள் அவைகளை உணவாக்கினர். மனிதர்கள் மட்டுமல்ல, அவர்கள் கொண்டுவந்த எலிகள், நாய்கள், பூனைகள், குரங்குகள், பன்றிகள் போன்ற அனைத்து விலங்குகளும் அவைகளுக்கு ஆபத்தை விளைவித்தன. அவைகள் டோடோவின் முட்டைகளையும் குஞ்சுகளையும் தின்றன. தரையில் கூடு கட்டிய டோடோவால் இவற்றைத் தடுக்க முடியவில்லை.

மேலும், மனிதர்கள் காடுகளை வெட்டி விவசாயம், குடியிருப்புகளுக்கு இடமாக்கினர். டோடோவின் வாழிடம் அழிந்தது. உணவு கிடைக்காமல் போனது.இவ்வாறு வேட்டை, புதிய விலங்குகள், வாழ்விட அழிவு ஆகியவை சேர்ந்து, வெறும் 100 ஆண்டுகளுக்குள் டோடோ இனமே அழிந்து போனது. 1662இல் “கடைசி டோடோ” கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலர் 17ஆம் நூற்றாண்டு இறுதி வரை இருந்திருக்கலாம் என்கின்றனர்.

ஆனால்,இப்போது அது முற்றிலும் அழிந்துவிட்டது. ஓவியங்களிலும் வரலாற்றிலும் மட்டுமே உள்ளது.டோடோவை முட்டாள் பறவை என்று சொல்கின்றனர். ஆனால், அது முட்டாள் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாதுகாப்பான தீவில் வாழ்ந்ததால், புதிய ஆபத்துகளுக்கு தயாராக இல்லை. மனிதர்களின் வருகை திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. டோடோவின் அழிவு ஒரு பெரிய பாடம். மனிதர்களின் செயல்கள் எப்படி இயற்கை சமநிலையை அழிக்கும் என்பதை காட்டுகிறது. இதனால் இப்போது உயிரினங்களைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கிறோம்.இப்போது விஞ்ஞானிகள் டோடோவை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கின்றனர். பழங்கால எலும்புகளில் இருந்து டிஎன்ஏ எடுத்து, நிக்கோபார் புறா போன்ற டோடோவின் நெருங்கிய உறவு பறவையுடன் இணைத்து “de-extinction” என்ற தொழில்நுட்பத்தில் அவைகளை மீட்கும் முயற்சி நடக்கிறது.

ஆனால்,டோடோவை மீண்டும் கொண்டுவந்தாலும் இன்றைய உலகில் அதற்கு பாதுகாப்பான இடம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.டோடோவின் வரலாறு நமக்கு பெரிய பாடம் தருகிறது. இது வெறும் அழிவுக் கதை அல்ல,மனிதர்களுக்கு மற்ற உயிரினங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி உள்ளது என்பதை எச்சரிக்கை செய்கிறது. இன்னும் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் பல உயிரினங்கள் டோடோ போல வரலாற்றில் மட்டுமே இருக்கும். அடுத்து டோடோ விடமிருந்து நாம் கற்க வேண்டிய முக்கியமான பாடம் வாழ்வில் நாம் முற்றாக புதிய சவால்களோ, இடர்களோ இல்லாமலே இருந்து விட்டால்,நாமோ அல்லது நம்முடைய தலைமுறையோ ஒருநாள் டோடோவை போல் முற்றாக அழிந்து போவோம்.தினமும் புதிய புதிய சவால்களுக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள முயல்வோம்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்