அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை.
உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. பசி எடுக்க என்னென்ன செய்ய வேண்டும்?
1. உணவில் மசாலாப் பொருள்களை அதிகமாகச் சேர்த்தால் பசி உண்டாகும். eg:- லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு போன்றவை உடலின் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக உணவு செரிமானமாக உடலிடமிருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும். உடல் சக்திக்கான இந்தத் தேவை அதிகரிக்கும்போது, பசி உணர்வு தூண்டப்படும். இத்தகைய சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு உட்கொண்டால் பசி உணர்வு அதிகரிக்கும்.
2.உணவு இடைவேளையின்போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால், அவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.
அதிக கலோரிகள் கொண்ட சீஸ், முட்டை, டார்க் சாக்லேட், நட்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடுவது உடல் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
3. மோர், பழைய சாதம், கஞ்சி, சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் உள்ள சத்துகள் பசி உணர்வை அதிகப்படுத்துவதுடன், உடல் வளர்ச்சியைச் சீராக்கும்.

4. மன அழுத்தமும் மன இறுக்கமும் பசியின்மைக்கான முக்கியமான காரணங்களாகும். நாம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்து அட்டவணைப்படுத்திச் செய்தால், இறுக்கமான சூழலில் இருந்து விடுபடலாம்.
மேலும் ஆழ்ந்து யோசிப்பதைத் தவிர்ப்பது, தேவையற்றக் குழப்பங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பது போன்றவையும் பசியின்மையில் இருந்து விடுபட உதவும்.
5. பெரும்பாலும் நம்மில் பலர் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை. ஆகவே, நேரத்துக்குச் சாப்பிடப் பழக வேண்டும்.
குறிப்பிட்ட நாள்கள் அட்டவணையைப் பின்பற்றினால் அது பழக்கமாகிவிடும். இது பசியின்மை பிரச்னையைப் போக்கி, உடலைச் சீர்படுத்தும்.

