மருத்துவம்

புரோட்டீன் அதிகம் கிடைக்கப் பெறும் உணவுகள்

புரோட்டீன் தான் நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்து. நம் உடலின் அமைப்பு, குறிப்பாக தசைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்யக் கூடியது.

அந்த புரதத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் தான் நிறைய பேர் தவறாக சாப்பிடுகிறோம். ஆனால் தினசரி உடலுக்குத் தேவையான புரதத்தை எடுப்பதற்கு கீழ்வரும் இந்த உணவுகள் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை ரோஸ்ட்

கடையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை எதையாவது வாங்கி சாப்பிடுவதை விட எப்போதாவது வீட்டிலேயே மிகக் குறைவான எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில், புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

வேகவைத்து தண்ணீரை முற்றிலும் வடித்த கொண்டைக்கடலையை ஒரு சிறிது ஆலிவ் ஆயில், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வறுத்து சாப்பிடலாம்.

முட்டை சாலட்

காய்கறிகளை வைத்து சாலட்டுகள் செய்து சாப்பிடுவோம். முட்டையை வைத்து ஆம்லெட், பொடிமாஸ் என்று செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் முட்டையை வைத்து சாலட் செய்தும் சாப்பிடலாம்.

முட்டை நம்முடைய தினசரி புரதத் தேவையை மிக எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வழி.

2-3 வேகவைத்த முட்டையை ஸ்பூன் வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.

மசித்த முட்டையில் சிறிது யோகர்ட், ஆர்கனோ போன்ற சில ஹெர்ப் மிக்ஸ், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து செய்தால் போதும் உங்கள் எக் சாலட் ரெடி.

பனீர் ரோஸ்ட்

இந்த பனீர் ரோஸ்ட்டை மாலை நேர உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரவு நேர உணவாகவும் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இதை செய்வதற்கும் அதிக நேரங்கள் ஆகாது. 5 முதல் 10 நிமிடத்தில் செய்துவிட முடியும்.

பனீரை சிறிய சிறிய சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அதில் சிறிது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மிளகு பொடி, கரம்மசாலா பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அதோடு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து செய்து அதை பனீரில் சேர்த்து மேரினேட் செய்யுங்கள்.

மேரினேட் செய்த பனீரை ஒரு குச்சியில் குத்தியோ அல்லது அப்படியே தோசைக்கல்லில் வைத்தோ எல்லா புறங்களிலும் வறுக்கவும். இதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

புரோட்டீன் ஸ்மூத்தி

நம்மில் நிறைய பேர் தினசரி தேவையான புரதத்தை எடுக்கவே முடியவில்லை என்றும் கவலைப்படுவார்கள்.

ஆனால் தினசரி புரோட்டீன் தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு சிறந்த வழி இந்த புரோட்டீன் ஸ்மூத்தி.

சிறுதளவு ஸ்பின்னாச், சிறிது பாதாம், முந்திரி, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றோடு சிறுதளவு பால் சேர்த்து அரைத்தால் ஸ்மூத்தி தயாராகிவிடும்.

அந்த ஸ்மூத்தியில் அரைக்கும் போது ஒரு கரண்டி புரோட்டீன் பவுடர் மட்டும் சேர்த்து கொண்டால் போதும் உணவு எடுத்துக் கொண்டது போலவும் இருக்கும். கிட்டதட்ட 20-25 கிராம் அளவு புரோட்டீனும் கிடைக்கும்.

ஹம்மூஸ் வித் வெஜ் ஸ்டிக்ஸ்

ஹம்மூஸ் என்பது கொண்டைக் கடலையை வைத்து மயோனைஸ்க்கு பதிலாக செய்யப்படும் இந்த குறிப்பு முழுக்க முழுக்க புரதத்தால் ஆனது.

சாலட்டாக சாப்பிட பிடிக்காத போது கரட், வெள்ளிரிக்காய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.

அதற்கு வேகவைத்த கொண்டைக் கடலையுடன் 4 பல் பூண்டு, ஒரு கரண்டி எண்ணெய், உப்பு சேர்த்து ஹம்மூஸ் அரைத்து இந்த கரட், வெள்ளரிக்காயை தொட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

முளைகட்டிய பச்சைப்பயறு

முளைகட்டிய பச்சைப்பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம்.

பாசிப்பயறில் அதிக புரதங்கள் இருக்கின்றன. அது முளைகட்டும் போது நிறைய நுண்ணூட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.

இந்த முளைகட்டிய பாசிப்பயறுடன் சேர்ந்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, மாதுளை முத்துக்கள் ஆகியவற்றைச் சேர்த்து செய்து சாப்பிடலாம்.

முளைகட்டிய பயறு மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்திற்குள் இந்த உணவை தயார் செய்து விடலாம்.

பீநட் பட்டருடன் வாழைப்பழம்

இதை செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால் புரோட்டீன் நிறைந்த ஒரு உணவு . வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன.

இனிப்பாகவும் இருப்பதால் நிறைவாகவும் சாப்பிட்ட திருப்தியும் இருக்கும்.

வாழைப்பழத்தை சிறு சிறு வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இரண்டு வாழைப்பழத் துண்டுகளுக்கு இடையில் சிறிது பீநட் பட்டரை வைத்து லேசாக அமுக்கி விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலே குறிப்பிட்ட இந்த ஏழு வகையான உணவுகளையும் செய்வதற்கு 10 முதல் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் தான் தேவை. வாரத்தின் ஏழு நாளும் தினமும் ஒன்று என்கிற விதத்தில் கூட செய்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு – இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம், செயல்திறன் ஆகியவற்றுக்கு பொறுப்பாகாது.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்