இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள – மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”நாகரிக இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் இலங்கை அரசு தமிழர்களையும் இந்திய – இலங்கை உறவு என்பதைவிடவும், பௌத்த சிங்கள மக்களை மையப்படுத்திய வட இந்திய உறவுதான் இந்த ”இரட்டை நாகரிகம்” என்பதை நிறுவி இந்தியாவுடன் தங்களைச் சமநிலைப்படுத்த சிங்களத் தலைவர்கள் முயற்சி.
தொப்புள் கொடி உறவு என்று கூறி தங்களை இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கியுள்ளனர் தமிழர்கள்
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் இன்றுவரை ஏறத்தாழ 38 வருடங்களாக சிங்கள அரசியல் தலைவர்கள் ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு என்பதை மேலும் நிறுவியுள்ளனர்.
ஆனால் , ஒப்பந்தம் கைச்சாத்திடக் காரண – காரியமாக இருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களில் எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.
முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் குழந்தைதான் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம்.
ஆனால் அச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை விடவும் அச்சட்டத்தில் இருந்து 13 வகையான அதிகாரங்கள் அதாவது, மாகாண சபைகளுக்கு உரிய விதிகள் கொழும்பு நிர்வாகத்தினால் மீள பெறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மாகாண சபைகளிடம் இருந்து போக்குவரத்து சபையின் சில அதிகாரங்கள் கூட கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுக் கொண்டிருக்கும் அதேநேரம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலத்தை பயன்படுத்தி,
இலங்கை அரசு குறிப்பாக சிங்கள தலைவர்கள் இந்திய – இலங்கை உறவு என்பதையும் அதன் நாகரிகத்தையும் மடைமாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் ஊடாகவே இலங்கைக்கு பௌத்த சமயம் வந்ததாக இந்திய தொல்லியல் நிபுணர் அமர்நாத், ஏற்கனவே வரலாற்றைத் திரிபுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வட இந்தியாவுடன் தமக்குள்ள உறவு குறிப்பாக நாகரிக உறவு என்பதை ”இரட்டையர்கள்” (Twins) என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான மிலிந்த மொறகொட நிறுவி வருகிறார்.
தூதுவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் அவர் புதுடில்லியில் தங்கியிருந்து இந்த இரட்டையர்கள் என்ற கருத்தியலை தொடர்ந்து நிறுவி வருகிறார்.

