ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி தொடங்கி 27 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் T20அணியின் தலைவராக சல்மான் அலிஆகா அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று, அனுபவ வீரர் பக்கர் சமான், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவுப், ஹசன் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர்.

இதேபோன்று இளம் நட்சத்திரங்களான ஷயிம் அயூப், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கும் ஆசிய கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கின்றது.
இதன் மூலம் பாபர் அசாம், கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாமல் நீக்கப்படுகிறார்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் குரூப் ஏ வில் உள்ளது. இவர்களைத் தவிர, ஓமான் மற்றும் யு.ஏ.இ. அணிகள் இந்த பிரிவில் இடம் பிடித்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டெம்பர் 14ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் அணி எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று முத்தரப்பு தொடர் ஒன்றில் விளையாடுகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் யு.ஏ.இ. அணிகள் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் உடன் மோதுகின்றன.

